இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பு மருத்தின் முதல் டோஸை இன்று போட்டுக்கொண்டார்.
இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக சுகாதாரப்பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்தநிலையில், நேற்று முதல் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இரண்டாவது கட்டத்தில் 60-வயதைக் கடந்தவர்களுக்கும், இணைநோய்கள் கொண்ட 45 வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக பாரத பிரதமர் மோடி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் முதல் ஆளாக தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அதன் பின்னர் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் காமராஜ், மாஃபா பாண்டியராஜன் மற்றும் திரையுலகினர், விளையாட்டுத்துறை பிரபலங்கள் என பலரும் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இதுவரை 2.40 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என தீவிர பணிகளில் ஈடுபட்டு வந்தார். நேற்றுடன் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 171 தொகுதிகளில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே இன்று காலை சென்னை ஓமந்தூரர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பு மருத்தின் முதல் டோஸை இன்று போட்டுக்கொண்டார். அப்போது முதலமைச்சருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் இருந்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், தமிழகத்தில் இதுவரை 11.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், தமிழகத்திற்காக 36 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தற்போது குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தவறாமல் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
