இந்திய அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டில் 18 பேர் கொரோனாவால் பலியாகி இருக்கின்றனர். கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு தமிழகத்திலும் மிகக்கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஏப்ரல் 20 முதல் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் மத்திய அரசு அறிவித்திருக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டு தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக தொழிலதிபர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணியளவில் ஆலோசனை நடத்த இருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,  உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் இந்தியாவிலும் பரவி உள்ளது. அதன் பரவலை தடுக்க இந்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு தமிழ்நாட்டிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

துபாயில் உயிரிழந்த தமிழர்..! விடாமல் முயன்று உடலை தமிழகம் வரவழைத்த வைகோ...!

இன்றியமையா உற்பத்தி மற்றும் தொடர் செயல்பாடுகளை கொண்டவற்றை தவிர பிற தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசு தற்போது மேலும் சில தொழிற்சாலைகளுக்கு விலக்கு அளித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் சில தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது தொடர்பாகவும் நோய்த்தொற்று பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் முதலமைச்சர் இன்று காலை 11 மணிக்கு காணொளி காட்சி மூலம் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.