இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் தமிழகத்தில் இருக்கும் மாமல்லபுரத்தில் 2 நாட்கள் சந்தித்து இரு நாட்டு உறவுகள் தொடர்பாக உரையாட உள்ளனர். இதற்காக இன்று காலை சென்னை வந்த பிரதமர் மோடி கோவளத்தில் தங்கியுள்ளார். சீன அதிபர் தற்போது மீனம்பாக்கம் விமான நிலையம் வந்துள்ளார். அவரை முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் வரவேற்க உள்ளனர்.

இந்த நிலையில் சீன அதிபரின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரையில் செய்யப்பட்டிருக்கிறது. சாலைகள், முக்கிய இடங்கள் ஆகியவை தூய்மைபடுத்தப்பட்டு புதுப்பொலிவுடன் ஜொலிக்கிறது.

இதனிடையே சீன அதிபர் தற்போது தனி விமானம் மூலம் சென்னை வந்துள்ள நிலையில், பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலையம் இருக்கும் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. திருவான்மியூர், அடையார், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.