சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி சுமித்ரா. இந்த தம்பதியினருக்கு அபிநவ் என்கிற 3 வயது மகன் இருந்துள்ளான். நேற்று கொருக்குப்பேட்டையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு மனைவி மற்றும் மகனுடன் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்துள்ளார். அபிநவ், இருசக்கர வாகனத்தின் முன்னால் அமர்ந்து இருக்கிறான். கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் வந்த போது திடீரென ஒரு மாஞ்சா கயிறு குழந்தையின் கழுத்தை அறுத்துள்ளது.

இதில் வலிதாங்க முடியாமல் துடித்த குழந்தையை உடனடியாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறி துடித்தனர். மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் விட்டதாக நாகராஜ் என்கிற 15 வயது சிறுவன் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு குழந்தை அபிநவ் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தவமிருந்து பெற்ற ஒரே மகன் பிணமாக கிடப்பது கண்டு பெற்றோர் கதறி அழுதது பார்ப்பவர்கள் நெஞ்சை உருக்கியது.

இதுகுறித்து குழந்தையின் தந்தை கோபால் கூறும்போது, "கொஞ்சம் கூட நாங்க நினைச்சு பார்க்கல. எங்கிருந்தோ வந்த மாஞ்சா கயிறு அவன் உயிரை எடுத்து விட்டது. என் கண் முன்னாலேயே நடந்த இந்த கொடுமையை நெனைச்சா மனசு தாங்கல. என் கண்முன்னாலேயே உயிருக்கு துடிச்ச என் குழந்தையை பார்த்து என் உயிரும் போயிற கூடாதான்னு நினைச்சேன். நாங்க தவமிருந்து பெற்ற பிள்ளை அபிநவ். அவன் விளையாடுறத மணிக்கணக்கா பார்த்து ரசிப்போம். அந்த அளவுக்கு சுட்டியான பையன் அபிநவ்.

அவன் தான் என் உலகம். அவன் இல்லாத நாளை எங்களால நெனச்சுக்கூட பார்க்க முடில. எந்த பெற்றோருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது. இதுவே கடைசி சம்பவமா இருக்கணும். காவல்துறை அதற்கான முயற்சியை எடுப்பாங்கனு நம்புறேன்" வேதனையோடு தெரிவித்தார்.