கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து, 5 மாதங்களுக்கு பிறகு பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், தமிழகத்தில் சென்னையில் மட்டும் பாதிப்பு குறைந்து வந்தாலும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

இதுவரை தமிழகத்தில் 5,69,370 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,148 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சில நாட்களில்  ஊரடங்கு முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தலைமைச் செயலகத்தில் இருந்து, காணொலி வாயிலாக 15 மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை நடத்தி வரும் தலைமைச் செயலாளர் சண்முகம், எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனை முடிவடைந்த பிறகு அரசு தரப்பில் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.