Asianet News TamilAsianet News Tamil

இதென்ன திடீர் பாசம்.. எடப்பாடி போடும் நாடகம்.. அதிமுக - பாஜகவை விளாசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று பழனிசாமி போடும் நாடகத்தைப் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியுள்ளார்.

Chief Minister MK Stalin slams bjp and AIADMK alliance at Chennai Christmas function-rag
Author
First Published Dec 22, 2023, 8:49 PM IST | Last Updated Dec 22, 2023, 8:49 PM IST

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (22-12-2023) மாலை பெரம்பூர் தொன் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் கழகச் சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட “அன்பின் இனிய கிறிஸ்துமஸ் பெருவிழா – 2023”-இல் கலந்துகொண்டு விழாவில் கலந்து கொண்டார்.

பிறகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “கிறித்துவ சகோதர சகோதரிகள் அனைவர்க்கும் என் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்! இந்த விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள். நடப்பது கிறிஸ்துமஸ் விழா. நடத்துவது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருப்பவர். இதுதான் நமது பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் சொன்னது போல் திராவிட மாடல் அரசு.

நம்முடைய மாண்புமிகு சேகர்பாபு அவர்களுக்குத் தோளோடு தோள் கொடுத்து, வழிகாட்டக் கூடியவராக இருப்பவர் மதிப்புக்குரிய தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள். அதேபோல் நம்முடைய கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் அவர்களும், கழகச் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுச் செயலாளர் சுபேர் கான் அவர்களும் இந்த விழாவை சிறப்போடு நடத்துகிறார்கள்.

Chief Minister MK Stalin slams bjp and AIADMK alliance at Chennai Christmas function-rag

சேகர்பாபு – பீட்டர் அல்போன்ஸ் – இனிகோ இருதயராஜ் – சுபேர் கான் இணைந்து நடத்தும் இந்தக் கிறிஸ்துமஸ் பெருவிழா சமத்துவப்  பெருவிழாவாக அமைந்துள்ளது. இதற்காகவே இவர்களைப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். நம்முடைய இந்திய நாடு என்பது, பல்வேறு மதங்களைப் பின்பற்றும் மக்களும் ஒற்றுமையாக வாழும் நாடு. வேறு வேறு மத நம்பிக்கைகள் இருந்தாலும் அது அவர்கள் அவர்களுக்குச் சொந்தமானதாகத்தான் இருக்குமே தவிர மற்றவர்களுக்கு எதிரானதாக இருக்காது. 

ஏன் என்றால் எல்லா மதமும் அன்பை மட்டும்தான் வலியுறுத்திச் சொல்கின்றன. எந்த மதமும் வேறுபாட்டைப் போதிப்பது இல்லை. அதனால்தான் கழகச் சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் நடக்கும் இந்தக் கிறிஸ்துமஸ் பெருவிழாவுக்கு எல்லா மத நம்பிக்கையாளர்களும் வந்திருக்கிறார்கள். இந்த மேடையைப் பாருங்கள். மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீ சிவஞான பால சுவாமிகள், மேனாள் நீதியரசர் என்.பாஷா என்று நாம் எல்லோரும் ஒற்றுமையாக சகோதரர்களாக இருக்கிறோம். 

இந்த ஒற்றுமை உருவாக இன்றைக்கு நாம் கூடியிருக்கிறோம். ஆனால், இந்த ஒற்றுமை உருவாவதைச் சிலரால் சகித்துக் கொள்ள முடியவில்லை, அரசியல் லாபங்களுக்காக மதத்தை பயன்படுத்துபவர்களால் மத ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் இந்த ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தப் பாடுபடும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அந்த வகுப்புவாத சக்திகளுக்குப் பிடிக்கவில்லை. நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் எல்லாப் பிரிவு மக்களும் அமைதியாக நல்லிணக்கத்தோடு வாழ்கிறார்கள். இதை தடுக்க ஒரு கூட்டம் தவியாய்த் தவிக்கிறது.

ஆனால் உண்மை என்னவென்றால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்த கூட்டத்தால் இந்த மண்ணில் நிச்சயமாக வெற்றி பெற முடியாது. ஒரு மனிதன் தன் மேலும் அன்பு செலுத்த வேண்டும், பிற உயிர்கள் மேலும் அன்பு செலுத்த வேண்டும் என்பதுதான் எல்லா மதங்களும் சொல்லுவது. இயேசு கிறிஸ்துவின் போதனைகளும் அப்படித்தான் போதிக்கின்றது. “உன் மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என்றுதான் இயேசு கிறிஸ்து சொல்கிறார். சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, இரக்கம் நீதி, தியாகம், பகிர்தல் என்று இயேசு கிறிஸ்து இந்த மனித குலத்துக்குக் கற்றுத்தந்த மதிப்பீடுகளை வரிசைப்படுத்த முடியும். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மனிதர்கள் அனைவரும் சமம் என்பதுதான் சமத்துவம். யாரையும் வேற்றுமையாக பார்க்காதே என்பதுதான் சகோதரத்துவம். அனைவருடனும் சேர்ந்து வாழ் என்பதுதான் ஒற்றுமை. ஏழைகள் மீது கருணை காட்டு என்பதுதான் இரக்கம். அநீதிக்கு எதிராகக் குரல் கொடு என்பதுதான் நீதி. மற்றவர்களுக்காக வாதாடு என்பதுதான் தியாகம். உன்னிடம் இருப்பதை இல்லாதவருக்குக் கொடு என்பதுதான் பகிர்தல். இதையெல்லாம்தான் கிறிஸ்தவம் சொல்கிறது. இந்த உன்னதமான குணங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் இருந்தால் அதுதான் சமத்துவ நாடாக அமையும்.

இங்கே சிலர் குறிப்பிட்டுச் சொன்னார்கள். அண்மையில் சென்னையிலும் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் வெள்ளம் வந்தபோது மக்கள் எல்லோருக்கும் அரசின் சார்பில் நிவாரண பொருட்களை வழங்கினோம். உண்மையான அக்கறையோடு செய்தோம். அமைச்சர்களில் இருந்து அதிகாரிகள் வரைக்கும் மக்களோடு மக்களாக களத்திலேயே இருந்து செயல்பட்டார்கள். அதிலும் இங்கே இருக்கக்கூடிய நம்முடைய சேகர்பாபு அவர்கள் 24 மணி நேரமும் மக்களோடே இருந்தார். இதே மாதிரிதான் திமுக தொண்டர்கள், நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் எல்லோரும் இரவு பகல் பார்க்காமல் உழைத்தார்கள். 

சமூக சேவை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தன்னார்வத் தொண்டர்கள் என்று எல்லாரும் மக்களுக்காக உழைத்தார்கள். மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தோம். அறிவித்து இரண்டு வாரத்துக்குள் கொடுத்த ஆட்சிதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி. நான் வரும் போது தொலைபேசியில் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, “சென்னை, சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அறிவித்தோமே, எந்த அளவுக்குக் கொடுத்திருக்கிறோம்” என்று கேட்டேன். 98% கொடுத்துவிட்டதாகச் சொன்னார்கள். 

மீண்டும் 5 லட்சம் பேர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களது கோரிக்கையும் விரைவில் பரிசீலிக்கப்பட்டு உரிய வகையில் பரிசீலிக்கப்பட்டு வழங்கப்படும். இதற்கு இடையில் தென்மாவட்டங்களிலும் மழை வெள்ளம் வந்தது. அந்த மக்களுக்கும் இழப்பீடு அறிவித்திருக்கிறேன். அவர்களுக்கும் விரைவில் கொடுக்கப் போகிறோம். அந்த மக்களை போய் நான் பார்த்தபோது அரசு இயந்திரம் உடனடியாகச் செயல்பட்டு எங்களைக் காப்பாற்றி விட்டது என்று சொன்னார்கள். அவர்களின் முகங்களில் மகிழ்ச்சியைப் பார்த்தபோதுதான் எனக்குக் கொஞ்சம் நிம்மதி வந்தது.

Chief Minister MK Stalin slams bjp and AIADMK alliance at Chennai Christmas function-rag

பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் அந்த மக்கள் எங்களை இன்முகத்தோடு வரவேற்றார்கள் அதையெல்லாம் பார்த்த போது நான் பூரித்துப் போனேன். ஆனால் இன்று அர்த்தம் இல்லாத குறைகளைச் சொல்கிறார்கள் நூற்றாண்டு காணாத மழை பெய்யும்போது இது மாதிரியான பேரிடர் ஏற்படும் நேரத்தில் அரசுக்கு உதவியாக – எந்தக் கட்சியாக இருந்தாலும் அது எதிர்க்கட்சியான அதிமுகவாக இருந்தாலும் அரசுக்கு துணை நின்றிருக்க வேண்டும். அரசுடன் இருந்து மக்களுக்குப் பணியாற்றி இருக்க வேண்டும். அப்படி யாராவது வந்தார்களா என்றால் இல்லை. 

கொரோனா காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த போதும் அவர்கள் இல்லை. எதிர்க்கட்சியாக இருந்த திமுகதான் முன்னின்று ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை அறிவித்து செயலாற்றியது. அதை நீங்கள் எல்லாம் மறந்திருக்க மாட்டீர்கள். இந்த மாதிரி நேரத்திலும் மலிவான அரசியல் செய்ய முன்னால் வந்து விடுகிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு விழாவில் பேசிய பழனிசாமி அவர்கள் சிறுபான்மை மக்களின் பாதுகாவலன் அ.தி.மு.க.தான் என்று பேசி இருக்கிறார். 

சிறுபான்மை மக்கள் மேல் அவருக்கு திடீர் என்று பாசம் பொங்குகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்புரிமை ரத்து, முத்தலாக் என்று எல்லா சட்டங்களையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தவர் பழனிச்சாமி. கூட்டணி தர்மத்திற்காக ஆதரிக்க வேண்டியதாக இருந்தது என்று சப்பைக்கட்டு கட்டினார். இப்போதுதான் பாஜக-வுடன் கூட்டணி இல்லை என்று ஒரு கபட நாடகம் போட்டுக்கொண்டு இருக்கிறாரே! 

பாஜகவை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசியிருக்கிறாரா? இல்லையே! இவரின் நாடகத்தை எல்லாம் பார்த்து மக்கள் யாரும் ஏமாற மாட்டார்கள். இந்தியா கூட்டணிதான் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிய அளவில் ஆட்சியை அமைக்கும் இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைய நாம் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார்.

இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. ஓலா ஸ்கூட்டரின் தாறுமாறான அம்சங்கள்..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios