சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே. தஹில் ரமானி மேகாலயாவுக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே. தஹில் ரமானி மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், உச்சநீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரையை மறு பரிசீலனை செய்யக் கோரி அவர் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தலைமை நீதிபதி வி.கே. தஹில் ரமானி பதவி விலகல் கடிதம் அளித்தார். 

இந்நிலையில், வெளிநாடு சென்றுள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று இந்தியா திரும்பியுள்ளார். இதனையடுத்து, கொலீஜியம் பரிந்துரைக்கு பின், மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசு தலைவர் தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவு வருவதற்கு முன், ராஜினாமா கடிதத்தை, குடியரசு தலைவர் அலுவலகத்துக்கு, தஹில் ரமானி அனுப்பி வைத்துள்ளார். 

தலைமை நீதிபதி இடமாற்றத்தை திரும்ப பெறும்படி, தமிழகத்தை சேர்ந்த, வழக்கறிஞர் சங்கங்கள், ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலீஜியத்தின் முடிவில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும், வழக்கறிஞர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், கடிதம் அனுப்பிய நாளில் இருந்து, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, தலைமை நீதிபதி வரவில்லை. ஆகையால், வழக்குகள் எல்லாம் நிலுவையில் இருந்து வருகின்றன. இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற இணைய தளத்தில் தலைமை நீதிபதி தஹில் ரமணியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தலைமை நீதிபதி வி.கே. தஹில் ரமணி மேகாலயாவுக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணைக்கு உகந்ததா? என விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.