முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் பணம், தங்கள் நகைகள் மற்றும் வைரம் உள்ளிட்டவை கொள்ளை போன வழக்கு விவகாரத்தில் விசாரணைக்கு பயந்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் சாலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 8-ம் தேதி ப.சிதம்பரத்தின் மேலாளர் முரளி ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அதில், ப.சிதம்பரம் வீட்டு பீரோவில் வைத்திருந்த பல லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள், தங்கக்காசு, 6 விலை உயர்ந்த பட்டு புடவைகள் திருடப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்திருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 

ப.சிதம்பரம் வீட்டில் பாதுகாப்பு பணியில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தும் அவர்களை மீறி அந்த வீட்டில் வேலை பார்க்கும் 2 பெண்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த வேலைக்கார பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இருவரிடம் நடத்திய விசாரணையில், நகைகள் மற்றும் பொருட்களை சிறுக சிறுக திருடியதை ஒப்புக்கொண்டனர். 

இதனையடுத்து, போலீஸ் புகார் திரும்பப் பெறப்பட்டது. இருப்பினும், நகைகள் மற்றும் பணம் திரும்பி அளிக்கப்படவில்லை. இதையடுத்து அந்த இரண்டு பணியாளர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு குறித்து பார்வதியையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் காவல்துறையினர் சுமார் மூன்று மாதங்களாக விசாரித்து வந்தனர்.

 

இந்நிலையில், ப.சிதம்பரத்தின் வீட்டில் திருட்டு தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட பார்வதி (46) என்ற பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். போலீசார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சில மணிநேரங்களில் அந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பார்வதி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் எனவும் பார்வதியின் குடும்பத்தார் சந்தேகிக்கின்றனர்.