சென்னையில் உள்ள விஜயா தனியார் மருத்துவமனையில் இயக்குநர் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. நாளுக்கு நாள் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த பொதுமக்களிடம் போதி ஒத்துழைப்பு இல்லாததால் அரசு திணறி வருகிறது. ஆகையால், கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. நேற்று தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 2,396 பேரில் சென்னையில் மட்டும் 1,254 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 39,641 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதில் 17,285 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 21,796 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் சென்னையில் 559 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்தாலும் உயிரிழப்பும் அதிகரித்து வருவது பொதுமக்களின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் திமுக எம்எல்ஏ அன்பழகன், பிரபல பாடகர் ஏ.எல்.ராகவன் ஆகியோர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். 

இந்நிலையில், மற்றொரு பிரபலமான சரத்ரெட்டியும் நேற்று கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவர் வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் இயக்குனர் ஆவார். பிரபல படத் தயாரிப்பாளரும் வாகினி ஸ்டுடியோவின் நிறுவனருமான நாகி ரெட்டியின் மகன் விஸ்வநாத ரெட்டியின் 2வது மகன் இவர். தற்போது, 51 வயதான இவரை கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து கடந்த சில தினங்களாக விஜயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி சரத்ரெட்டி உயிரிழந்தார். இவரது உடல் பாதுகாப்புடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.