சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிக்கப்பட்டதையடுத்து அந்த மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக சென்னையில் மட்டும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,689ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 1000ஐ கடந்துள்ளது. இதனிடையே, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல், கொரோனா தடுப்பு பணிகளில் பல தனியார் மருத்துவமனைகளும் ஈடுபட்டு வருகிறது.  

இந்நிலையில், சென்னை வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த சில மருத்துவர்கள், செவிலியர்கள் அடுத்தடுத்து 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  அந்த மருத்துவமனையை மாநகராட்சி அதிகாரிகள் தற்காலிகமாக மூடி அந்த பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், அங்கு  சிகிச்சை பெற்று வந்த உள் நோயாளிகள் மற்றும் கொரோனோ நோயாளிகள் உட்பட அனைவரும் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின் மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.