சென்னை ஜாபர்கான்பேட்டையில் திடீரென தீப்பிடித்த டிரான்ஸ்பார்மர்! ஆட்டோ, கடை தீயில் நாசம்!

சென்னை ஜாபர்கான்பேட்டையில் திடீரென டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் அருகில் இருந்த ஒரு ஆட்டோவும், வீட்டு உபயோகப் பொருட்கள் கடையும் தீயில் நாசமாகியுள்ளன.

Chennai: Transformer caught fire in Jafferkhanpet

சென்னை ஜாபர்கான்பேட்டையில் வியாழக்கிழமை மாலை திடீரென டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்தது பரபரப்பு ஏற்பட்டது. பாரி நகர் கரிகாலன் தெருவில் இந்த விபத்து நடந்துள்ளது. தீ விபத்து குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

ஆனால், தகவல் தெரிவித்து சுமார் அரைமணி நேரம் ஆகியும் தீயணைப்பு வாகனம் அங்கு வராததால் தீ மடமடவென கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. அதற்குள் அருகில் இருந்த ஆட்டோ ஒன்றிலும் தீ பற்றி எரிந்து நாசமானது. டிரான்ஸ்பார்மருக்குப் பக்கத்தில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் கடைக்கும் தீ பரவியது.

ரூ.600 கோடி புதையல் இருப்பதாக வீட்டுக்குள் புகுந்து கொள்ளை அடிக்க முயன்ற கும்பல்

இதனால், அப்பகுதி மக்கள் காவல் நிலையத்துக்குச் சென்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தீயணைப்புத் துறையினர் அங்கு வந்தனர். இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்து டிரான்ஸ்பார்மரில் எரியும் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இரண்டு மணிநேர போராட்டத்துக்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே அந்த டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டு வந்ததாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் தினமும் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏற்படுவதும் மின்வாரிய ஊழியர்கள் வந்து அதனைச் சரிசெய்வதுமாக இருந்தனர் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

திடீர் திடீர் என ஏற்படும் மின்வெட்டைக் கண்டித்து நேற்று ஈக்காட்டுத்தாங்கல், ஜாபர்கான்பேட்டை பகுதி மக்கள் கூடி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தற்போது இந்தத் தீ விபத்தினால் மின் விநியோகம் தடைபட்டு அந்தப் பகுதி முழுவதும் இருளில் மூழ்கி இருக்கிறது. இவ்வாறு அடிக்கடி பழுதாகும் டிரான்ஸ்பார்மரை மாற்றி புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜாபர்கான்பேட்டை பகுதி வாசிகள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

கொலையில் முடிந்த 9 வருட கள்ளக்காதல்! குழந்தை கேட்ட காதலி கழுத்தை அறுத்துக் கொலை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios