146 நாட்களுக்கு பிறகு சென்னையில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.33.50 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் செயல்பட்டு வந்த 5,300 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு அமலில் இருந்தபோதும், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளின் அடிப்படையில் மே 7ம் தேதி சென்னை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிளை தவிர்த்து, தமிழகத்தின் பிற பகுதிகளில் 3,700 கடைகள் திறக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சென்னையில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது. இதனையடுத்து, நேற்றுமுதல் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்று, தனிமனித இடைவெளியைப் பின்பற்றி மதுபானங்களை வாங்கிச் சென்றனர். மதுக்கடைகள் முன்பு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், சென்னையில் நேற்று ஒரே நாளில் 33 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை முழுவதும் உள்ள 720 டாஸ்மாக் கடைகளில் 33.50 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு முன்பாக நாளொன்றுக்கு ரூ.20 முதல் 25 கோடிக்கு அதிகமாக மதுபான பாட்டில்கள் விற்பனையாகும். இப்போது, அதில் பாதியளவுக்கே விற்பனை நடைபெறும் என கூறிவந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ.33.50 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.