இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பாதிப்பு  எண்ணிக்கை 2500ஐ நெருங்கிவிட்டது. ஆனாலும் அது சமூக தொற்றாக மாறாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுவருகின்றன.

கொரோனா ஊரடங்கால் நாடே வீட்டில் முடங்கியுள்ள நிலையில், மருத்துவர்களும் செவிலியர்களும் இரவு பகல் பாராமல் கொரோனாவிலிருந்து மக்களை காக்க உழைத்துவருகின்றனர். எந்நேரமும் கொரோனா நோயாளிகளுடனேயே இருக்கும் அவர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்பையும் மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்துள்ளன. 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 309ஆக இருக்கும் நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சையளித்து அவர்களை கொரோனாவிலிருந்து காப்பாற்ற மருத்துவர்களும் செவிலியர்களும் உழைத்துவரும் வேளையில், முடிந்தவரை கொரோனா நோயாளிகளிடமிருந்து மருத்துவர்களும் செவிலியர்களும் விலகியிருக்கும் வகையில், கொரோனா நோயாளிகளுக்கு உணவு, மருந்து ஆகியவற்றை எடுத்துச்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட ரோபோக்கள், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இந்த ரோபோக்கள், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் முன்னிலையில் பரிசோதிக்கப்பட்டது. அப்போது அந்த ரோபோக்கள், உணவுகள் மற்றும் மருந்துகளை கொரோனா சிறப்பு வார்டுகளில் இருக்கும் நோயாளிகளுக்கு எடுத்துச்சென்று கொடுத்தன. 

ரோபோக்கள் பரிசோதனை முடிந்தபின்னர் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டுகளில் இருக்கும் நோயாளிகளுக்கு ரோபோட்டிக் நர்ஸ்கள், மருந்து மற்றும் உணவுகளை எடுத்துச்சென்று கொடுக்க வைத்து பரிசோதிக்கப்பட்டன. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், கொரோனா நோயாளிகளுடனான தொடர்பை குறைத்துகொள்ள இந்த ரோபோக்கள் உதவிகரமாக இருக்கும். இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து செவிலியர்களுக்கு பரவும் ரிஸ்க் குறையும் என்று விஜயபாஸ்கர் பதிவிட்டுள்ளார்.

சீன மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பணிவிடை செய்ய ரோபோக்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், ஏற்கனவே திருச்சி பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட இரண்டு ரோபோக்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதார அதிகாரிகள் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.