சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.  

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அழையா விருந்தாளியாக வந்து கொரோனா வைரஸ் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழகம் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. 

இந்நிலையில், இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 9,909 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 133-ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12,203 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 95-ஆக உள்ளது.

இந்நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். கே.கே.நகர் 38 வயது ஆண், திருவொற்றியூர், செங்குன்றம் மற்றும் புளியந்தோப்பை சேர்ந்த முதியவர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக சென்னையில் உயிரிழப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.