சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், ராயப்பேட்டை, கடற்கரையின் ஓரங்களில், வெள்ளை பஞ்சு படர்ந்தது போல், நுரை பொங்கி வெளியேறி கடலுக்கு மேலும் அழகு சேர்த்துள்ளது.

ஆனால், இந்த அழகில் உள்ள ஆபத்து தெரியாமல், கடற்கரைக்கு படையெடுத்துள்ள மக்கள், அந்த நுரையில் மூழ்கி செல்பி எடுத்து வருகிறார்கள்.

இந்த நுரை, எப்படி உருவாகிறது என்றால்... தண்ணீர் மாசு படுவதால். குறிப்பாக தற்போது சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்ததால், மனித கழிவுகள் முதல் அனைத்து அசுத்தமும் கடலில் தான் கலக்கிறது. இந்த தண்ணீர் மாசுபாடு கடலில் கலக்கும் போது இது போன்ற நுரை ஏற்படுகிறது.

இந்த நுரை, மனிதர்களின் தோல் மீது படுவதால் தோலில் எரிச்சல் அல்லது தோல் சம்மந்தமான நோய் வர வாய்ப்புள்ளது என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

ஆனால் இந்த ஆபத்தை உணராமல் கடலில் ஆங்காங்கு பொங்கி கிடைக்கும் நுரையில், ஆட்டம் போட்டு கொண்டும், செல்பி எடுத்தும் வருகிறார்கள் மக்கள். எனவே கடலுக்கு வரும் மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.