சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள் நடிகர் விஜய்யை சந்தித்து ஆதரவு கேட்டனர்.
Sanitation Workers Protest in Chennai: சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிராக ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு, பகலாக தங்களது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பல ஆண்டுகளாக தற்காலிகப் பணியாளர்களாகப் பணியாற்றி வரும் அவர்கள் தங்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்
சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6-வது மண்டலங்களில் (ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர்) தூய்மைப் பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால், 2,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழப்பு மற்றும் குறைந்த ஊதியம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு நடத்தும் பேச்சுவார்த்தைகள் தோல்வி
தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் சென்னையின் பல பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் மலைபோல் குவிந்துள்ளது. இதனால் தூர்நாற்றம் வீசுவதாகவும், சுகாதாரப் பிரச்சினைகள் எழுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களிடம் அரசு சார்பில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோருடன் 7 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.
அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு
தங்களை நிரந்தர பணியாளர்களாக மாற்றும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்பதில் தூய்மை பணியாளர்கள் உறுதியாக உள்ளனர். இதற்கிடையே பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தூய்மை பணியாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்று தூய்மை தொழிலாளர்களுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
திமுக அரசு மீது குற்றச்சாட்டு
''சமுகநீதி குறித்து பக்கம் பக்கமாக பேசும் திமுக அரசு எங்களின் குரலுக்கு செவிசாய்க்க மறுக்கிறது'' என்று தூய்மை பணியாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மேலும் ரவுடிகளை வைத்து மிரட்டினாலும், துப்பாகிக்கியை காட்டி மிரட்டினாலும் போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று தூய்மை பணியாளர்கள் உறுதியாக உள்ளனர். இந்நிலையில், தூய்மை பணியாளர்கள் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யை நேரில் சந்தித்து ஆதரவு கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்யை சந்தித்த துய்மை பணியாளர்கள்
அதாவது தூய்மை பணியாளர்கள் போரட்டக்குழுவின் ஒரு சில பிரதிநிதிகள் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய்யை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது விஜய் தூய்மை பணியாளர்களின் போராட்டத்துக்கு தன்னுடைய முழு ஆதரவையும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. விஜய் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல்வாதிகள் ஆதரவு கொடுத்தால் அது திமுக அரசின் காதுகளை விரைவாக சென்றடையும் என தூய்மை பணியாளர்கள் நினைக்கின்றனர். தூய்மை பணியாளர்களின் போராட்டத்துக்கு விஜய் நேரில் வந்து ஆதரவு கொடுக்கவும் வாய்ப்புள்ளது.
