சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று ருத்தரதாண்டவம் ஆடிவருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் பொதுமக்கள் மத்தியில் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் எதுவும் பலன் அளிக்கவில்லை. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ராஜீவ்காந்தி, ஓமந்தூரார், கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி மருத்துவமனையின் டீனாக இருப்பவர் ஜெயந்தி. ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு டீனாக இருந்த இவர் தலைமையில் அங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் உட்பட இதுவரை 65 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் டீன் ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதற்காக தற்போது மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.