இந்தியாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக தாறுமாறாக உயர்ந்து வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 25 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை  1,267 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று ஒருவர் பலியான நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமை சிகிச்சையில் வைத்து அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.

கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு தமிழகத்திலும் மிக கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களும் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு 24 மணி நேரமும் காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் காவலர் ஒருவருக்கு தற்போது கொரோனா அறிகுறி ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஏழுகிணறு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் காவலருக்கு கொரோனா அறிகுறிகள் தென்படுவதாக கூறினர். இதையடுத்து அங்கு இருக்கும் கொரோனா சிறப்பு வார்டில் காவலர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் தொடர்ந்து தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு மருத்துவர்களால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார். முன்னதாக புதுப்பேட்டையைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் கொரோனா அறிகுறிகள் காரணமாக திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரின் கணவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னைத்தானே வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். இவர் ஏழுகிணறு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.