ஊரடங்கு உத்தரவை அடுத்து அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே பகல் 1 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு தடை உத்தரவு காரணமாக வேலைக்கு செல்லாமல் பொருளாதார ரீதியாக  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு தன்னார்வலர்களும், அரசியல் கட்சியினரும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு நேரடியாக மக்களைச் சந்தித்து நிவாரண உதவி வழங்கக்கூடாது, அதை அரசிடம் அளிக்கவேண்டும். மீறினால் சட்டப்படி நடவடிக்கை  எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. 

இந்நிலையில், இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ஊரடங்கு உத்தரவை முறையாகப் பின்பற்ற வேண்டும். தன்னார்வலர்கள் உதவி செய்பவர்கள் எண்ணம் போற்றுதலுக்குரியது. அவர்களுக்கு உதவ காவல்துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர். தன்னார்வலர்கள் பாதுகாப்பும் முக்கியம். அவர்களும் பாதிப்புக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த வழிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். 

ஊரடங்கு உத்தரவை அடுத்து அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே பகல் 1 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஓரிரு கிலோ மீட்டர் தொலைவில் மட்டுமே தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.