பொதுமக்களுக்கு மட்டுமல்ல போலீசாரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். அப்படி அணியாவிட்டால் போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டுகின்றனர். மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் சிக்னல்களை மீறுவது செல்போனில் பேசியவாறு வாகனங்களை ஓட்டுவது என போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் 'ஹெல்மெட்' தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் 'ஹெல்மெட்' அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டும் போலீசார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். 

இது குறித்து நீதிமன்றத்தில் பதில் அளித்த போலீசார், ஹெல்மெட் அணியாத போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். இருப்பினும் போலீசார் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் போலீசார் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்க உயர் போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

இதனை தொடர்ந்து சென்னை போலீஸ் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், போலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு அணியாவிட்டால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே போலீசாருக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது மீண்டும் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஹெல்மெட் அணியாத போலீசாரை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.