அத்திவரதர் தரிசன பக்தர்களுக்கு அன்னதானம் என்கிற பெயரில் சென்னை போலீஸ் ஸ்டேசனில் பணியாற்றும் போலீசார் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

அத்திவரதர் இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே தரிசனம் கொடுக்க உள்ளார். அதற்குள் அவரை பார்த்துவிட வேண்டும் என்று லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். நேற்று சுமார் 5 மணி நேரம் வரிசையில் நின்றே அத்திவரதரை சில நொடிகள் மட்டுமே பக்தர்களால் பார்க்க முடிந்தது. வெளியூர் பக்தர்களின் கூட்டம் காரணமாக உள்ளூர் பக்தர்கள் கோவில் பக்கமே வர முடியாத சூழல் உள்ளது.

இந்த நிலையில் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு தண்ணீர், பால், மோர், சாப்பாடு என பல தன்னார்வலர்களால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போதைக்கு பிரபல நிறுவனங்கள் மற்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்த செல்வந்தர்கள் இதற்கு ஸ்பான்சர் செய்து வருகின்றனர். அதே சமயம் அத்திவரதர் அன்னதான திட்டத்திற்கு நிதி உதவி செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.

ஆனால் அப்படி நிதி உதவி செய்தால் அது முதலமைச்சரின் பெயரில் தான் கோவிலில் உள்ள பக்தர்களுக்கு சென்று சேரும் என்பதால் யாரும் அதற்கு நன்கொடை கொடுக்க விரும்பவில்லை. இந்த நிலையில் சென்னையில் உள்ள போலீஸ் ஸ்டேசன்களில் உள்ள இன்ஸ்பெக்டர் ரேஞ்சில் உள்ள அதிகாரிகள் நேரடியாக தொழில் அதிபர்களை தொடர்பு கொண்டு அத்திவரதர் அன்னதான திட்டத்திற்கு நன்கொடை கேட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு ஸ்டேசனில் இருந்து இதற்கென தனியாக அதிகாரிகள் செயல்படுவதாக சொல்கிறார்கள். வசூலாகும் பணம் உடனுக்கு உடன் முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்க்கப்பட்டு அதற்கான ரசீதும் நன்கொடை கொடுத்தவர்களுக்கு கொடுக்கப்பட்டு வருவதாக சொல்கிறார்கள். ஆனால் சிலர் கருப்பு பணத்தை நன்கொடையாக கொடுப்பதால் ரசீது வேண்டாம் என்கிறார்கள். இதனால் அந்த பணத்திற்கு யார் பெயரில் ரசீது போடுவது என்று அதிகாரிகள் குழப்பம் அடைந்து வருகின்றனர்.