சென்னை கோயம்பேட்டில் 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்ட தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 3 , 4 நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்து வந்தது. இதனால் தமிழகத்தில் விரைவில் கொரோனா இல்லாத நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், முதல்வரும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா கட்டுப்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். ஆனால், அவர் கூறிய மறுநாளே நிலைமை தலைகீழாக மாறியது. நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நூறை எட்டியது. நேற்றும் 43 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டனர். மொத்தம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,520 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்தது. சென்னையில் மட்டும் 303 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்ட தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கார் ஓட்டுநரான கணவருக்கு கொரோனா உறுதியான நிலையில் மனைவிக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இருவருக்கும் ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கோயம்பேட்டில் பூ வியாபாரம் செய்துவரும் பாதிக்கப்பட்ட இளைஞரின் தாயும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவர்கள் வசித்து வந்த பகுதி முழுவதும் மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்து கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 

தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா வைரசால் பாதித்த சிலருக்கு நோய்த் தொற்றுக்கான முழுமையான காரணம் தெரியவில்லை. இதனால் சமூக தொற்று ஏற்பட்டுள்ளதோ? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது.