தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நேரு உள்விளையாட்டு அரங்கம் கொரோனா வார்டாக மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் அழையா விருந்தியாக வந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நியாவில் கடந்த சில வாரங்களாக அடக்கி வாசித்து வந்த கொரோனா தற்போது ருத்தரதாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில், தமிழகம் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. 

நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் சுமார் 759 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,512ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சம் பெற்றுள்ளது. நேற்று மட்டும் சென்னையில் 624 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,989 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சென்னை மூர் சந்தை வளாகத்திற்குப் பின்புறம் அமைந்துள்ள நேரு உள் விளையாட்டு அரங்கம் 600 படுக்கைகள் கொண்ட கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்றப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும், வரும் நாட்களில் ரயில், விமான வழி பயணங்கள் நாடு முழுவதும் தொடங்கப்படுவதால், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே, போதுமான கொரோனா சிறப்பு வார்டுகளை உருவாக்குவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. கொரோனா முதல்நிலை அறிகுறி உள்ளவர்கள் நேரு உள்விளையாட்டு அரங்கில் தங்க வைக்கப் படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.