போஸ்டர் ஒட்டினால் இனி அபராதத்துடன் கூடிய சிறை தான்.. வந்தது புதிய நடைமுறை!!
மெட்ரோ ரயில் நிலைய தூண்கள் மற்றும் கட்டடங்களில் போஸ்டர் ஒட்டினால் அபாரதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நிர்வாகம் சார்பாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி, மற்றும் வேலைக்கு செல்பவர்கள் இதனால் அதிகம் பாதிப்படைகின்றனர்.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்று தான் மெட்ரோ ரயில் சேவை. இந்த ரயில் செல்லும் பாதை பாலங்கள் மேலேயும் சில இடங்களில் சுரங்கம் தோண்டியும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆகாயத்தில் செல்லும் வகையில் கட்டப்பட்ட பாலங்களில் பெரிய பெரிய தூண்கள் வரிசையாக இருக்கும். நல்ல விசாலமாக இருக்கும் இந்த தூண்களை தற்போது அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் போஸ்டர் ஒட்ட பயன்படுத்தி வருகின்றனர். தலைவர்கள் வருகை, பிறந்தநாள், மாநாடு போன்றவற்றிக்கு பெரியளவில் போஸ்டர் அடித்து ஒட்டுகின்றனர்.
இதை தடுக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடியாக ஒரு உத்தரவை வெளியிட்டிருக்கிறது. அதன்படி இனி மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு சொந்தமான தூண்கள் மற்றும் சுவர்களில் போஸ்டர் ஒட்டினால் 6 மாதம் சிறையோ, 1000 ரூபாய் அபராதமோ அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனையோ விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
இதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ள நிலையில் தூண்களில் ஓவியம் அல்லது பொன்மொழிகள் எழுதப்பட்டால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாது என்று மெட்ரோ ரயில் நிர்வாத்திற்கு யோசனை தெரிவித்துள்ளனர்.