கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் முகமாக தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவடைய வேண்டிய ஊரடங்கு நடைமுறை மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி மே 3ம் தேதி வரை நாடு முழுவதும் கடைகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்துகள், முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்குமாறு அரசு அறிவித்திருக்கிறது. அத்தியாவசிய பணிகள் மட்டும் தடையின்றி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

மத்திய, மாநில அரசின் முக்கிய அலுவல்கள், வங்கிகள், காவல்துறை போன்றவை கொரோனா ஊரடங்கு நேரத்திலும் தீவிரமாக செயலாற்றி வருகிறது. குறிப்பாக கொரோனா தடுப்பு பணிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு காரணமாக வாகனங்களை பழுது பார்க்கும் கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பணியாற்றுபவர்களின் வாகனங்கள் பழுதடைந்தால் சரிசெய்வதற்கு சிக்கல் நீடித்து வருகிறது. பல இடங்களில் மெக்கானிக்களை தேடி வரவழைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் சென்னையைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களின் இருசக்கர வாகனங்களுக்கு இலவசமாக பஞ்சர் செய்து தரப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ராஜா என்பவர் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவர் சொந்தமாக வாகனங்கள் பழுது பார்க்கும் கடை வைத்திருக்கும் நிலையில் தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தன்னாலான உதவியை செய்ய திட்டமிட்டார். அதற்காக கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து அலுவலர்களின் இருசக்கர வாகனங்கள் பஞ்சரானால் இலவசமாக சரி செய்து தரப்படும் என்று அறிவித்திருக்கிறார். அதன்படி பலரும் அவரது சேவையால் பலன் பெற்று வருகின்றனர். அவரது இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் அவரது சேவைக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.