இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் உச்சம் அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி 7,915 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 7,491 பேர் குணமடைந்திருக்கும் நிலையில் 103 உயிர்களை கொரோனா வைரஸ் காவு வாங்கி இருக்கிறது. தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு தாறுமாறாக அதிகரித்து வருவதால் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தமிழகத்திலேயே மிக அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக தலைநகர் சென்னை விளங்குகிறது. அங்கு நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்து வரும் பாதிப்பு தற்போது 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நேற்று வெளியான அறிவிப்பில் சென்னையில் மட்டும் 625 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாதி இருக்கிறது. இதன்மூலம் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,989 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இருக்கும் 15 மண்டலங்களிலும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. அதிகபட்சமாக வடசென்னையின் ராயபுரத்தில் 1,889 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. 4 மண்டலங்களில் பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்புகளின் பட்டியல் பின்வருமாறு:

ராயபுரம் - 1,889

கோடம்பாக்கம் - 1,391

திரு.வி.க நகர் - 1,133

தேனாம்பேட்டை - 1,054

தண்டையார்பேட்டை - 974

அண்ணா நகர் - 829

வளசரவாக்கம் - 679

அடையாறு - 533

அம்பத்தூர் - 415

திருவொற்றியூர் - 274

மாதவரம் - 213

சோழிங்கநல்லூர் - 160

பெருங்குடி - 152

மணலி - 126

ஆலந்தூர் - 107

மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் - 60

சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்துள்ளது. தற்போதுவரை தலைநகரில் 5,865 பேர் சிகிச்சையில் உள்ளனர். அனைத்து மண்டலங்களில் கொரோனா தடுப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தொற்று அதிகம் இருக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.