இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துவிட்டது. கொரோனாவை கட்டுப்படுத்த மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு தொழில்துறைகள் பாதிக்கப்படாமல் இருக்க சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 2784 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இரண்டாமிடத்தில் இருந்த தமிழ்நாடு 1204 பாதிப்புகளுடன் தற்போது நான்காமிடத்தில் உள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை, அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல், கொரோனா தொற்றுள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துதல் ஆகிய பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. 

தமிழ்நாட்டில் பரிசோதனையை அதிகப்படுத்தியுள்ள நிலையில், கொரோனா டெஸ்ட் செய்ய பயன்படும் பிசிஆர் கருவியில், 40,032 கருவிகளை டாடா நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வழங்கியுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்காக ஏற்கனவே ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் சென்னையில், கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த மாநகராட்சிக்கு உதவும் விதமாக சென்னை ஐஐடியின் விடுதிகளில் ஒன்றான மகாநதி விடுதியை வழங்குவதாக சென்னை ஐஐடி இயக்குநர் தெரிவித்துள்ளார்.