கல்வி நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கவும், இல்லையெனில் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் நீதிமன்றம் உத்தரவு.
செங்குந்த முதலியார் சங்கம் நடத்தும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சங்கம் தொடர்பான வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளியில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடத்தை நடத்துகிறார்கள். ஆனால் அந்த பாடம் நடத்தப்படும் பள்ளிக்கூடத்தின் பெயரில் சாதியில் உள்ளது. இது எப்படி நியாயமாகும் என்று தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
சாதி பெயரை நீக்க வேண்டும்
இதனால் கல்வி நிலையங்களில் உள்ள சாதி பெயரை நீக்க வேண்டும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார். ஆனால், சாதி பெயரை நீக்குவது குறித்து அரசு தெளிவான முடிவை அறிவிக்கவில்லை கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் கொட்டித்தீர்த்த கோடை மழை! மின்சாரம் துண்டிப்பு! அதுமட்டுமல்ல விமான சேவை பாதிப்பு!
சென்னை உயர்நீதிமன்றம்
அதில் சங்கங்களில் உள்ள சாதி பெயரை நீக்குவது குறித்து பதிவுத்துறை ஐ.ஜி. சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அந்த சாதிப் பெயரை தொடர்ந்து சங்கங்கள் பயன்படுத்தி வந்தால் அது சட்டவிரோதம் என்று அறிவித்து அந்த சங்கத்தின் பதிவை ஐ.ஜி. ரத்து செய்ய வேண்டும். மேலும் பள்ளிகள் கல்லூரிகளில் சாதியின் பெயரில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை அகற்ற சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் பதிவுத்துறை ஐ.ஜி. நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
4 வாரங்களில் நீக்க வேண்டும்
கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும். இல்லாவிட்டால் அக்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அந்த கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களை, அங்கீகரிக்கப்பட்ட வேறு கல்வி நிலையங்களில் சேர்க்க வேண்டும். அதேபோல அரசு நடத்தும் கள்ளர் சீர்திருத்தப் பள்ளி, ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆகியவற்றின் பெயரை அரசு பள்ளி என்று மாற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நன்கொடையாளர்கள் கல்வி நிலையங்களுக்கு நன்கொடை வழங்கியவர்களின் பெயரில் இருந்த சாதியை நீக்க வேண்டும். இந்த நடவடிக்கை அனைத்தையும் 3 மாதங்களுக்குள் அரசு மேற்கொள்ள வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
