அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகளிடம் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவற்றை ஆராய்ந்து அவர்கள் முடிவு எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.
ஆம் ஆத்மி கட்சி சார்பில் அதன் தமிழக அமைப்பாளர் வசீகரன் தாக்கல் செய்த மனுவில், வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவோ, யாருக்கும் ஆதரவளிக்கும் நிலைப்பாட்டையோ எடுக்கவில்லை என்றும், ஆனால் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நூறு சதவீத வாக்குப்பதிவு, ஓட்டுக்கு பணம் பெறக் கூடாது, வேட்பாளர்களையும் அவர்களின் குற்ற பின்னணியையும் அறிந்து வாக்களிக்க வேண்டும் வேண்டும் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கோரி தலைமை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்த மனு நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.தங்களின் கோரிக்கையை பரிசீலித்து அனுமதி வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டுமென்ற கோரிக்கையுடன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், மாநில முழுவதற்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும், அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகளிடம் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவற்றை ஆராய்ந்து அவர்கள் முடிவு எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், ஆம் ஆத்மி கட்சியின் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அதிகாரிகளை சந்தித்து விண்ணப்பித்து நிவாரணம் பெறும்படி அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்.
