இடுப்பளவில் வீட்டை சூழ்ந்த வெள்ளம்.. பிரசவித்த தாயையும், சேயையும் சாமர்த்தியமாக மீட்ட பேரிடர் மீட்புக்குழு..!
வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னை அருகே கரையை கடக்கத் தொடங்கியது. இதனால், நேற்று பிற்பகலில் தொடங்கிய மழை இடைவிடாமல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வருகிறது.
மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட தாயையும் பிறந்து 2 நாட்களே பச்சிளம் குழந்தையையும் பேரிடர் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டு நிவாரண முகாமில் தங்க வைத்துள்ளனர்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னை அருகே கரையை கடக்கத் தொடங்கியது. இதனால், நேற்று பிற்பகலில் தொடங்கிய மழை இடைவிடாமல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வருகிறது. இந்த காற்றுடன் கூடிய கனமழை இன்னும் சிலமணி நேரங்கள் நீடிக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கனமழையின் காரணமாக தியாகராயர் நகர், மேற்கு மாம்பலம், சூளைமேடு, புரசைவாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், சென்னை மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கன மழையின் காரணமாக வெள்ள நீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் இடுப்பளவு வரை மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. வீடுகளுக்குள் வெள்ளநீரில் சிக்கி வெளியேற முடியாமல் தவிப்பவர்களை படகுகள் மூலமும் ரப்பர் மிதவைகள் மூலமும் பேரிடர் மீட்புப் படையினர் மீட்டு வருகின்றனர். ஏராளமானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் உணவு, மருந்து மாத்திரைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பெரும்பாக்கம், இந்திரா நகர் ஏரியை ஒட்டிய பகுதியில் கனமழையின் காரணமாக இடுப்பளவிற்கு மழை நீர் தேங்கி, குடியிருப்பு பகுதிகளையும் சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகளுக்குள் உள்ளவர்கள் வெளியில் வர முடியாமல் தவித்தனர். இந்நிலையில் அப்பகுதியில் குழந்தை பெற்ற ஒரு பெண் கைக் குழந்தையுடன் வெளியில் வர முடியாமல் சிக்கிக்கொண்டனர். இது தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்பு படையினர் நாற்காலியில் அமர வைத்து தாய் சேய் இருவரையும் பத்திரமாக மீட்டு அருகில் உள்ள முகாமில் பத்திரமாக தங்க வைத்துள்ளனர்.