சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து சீறிபாய்ந்து செல்லும் விமானங்களால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5 மணியில் இருந்தே விமானங்கள் பறப்பதால் சுற்றுவட்டார மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுவரை 20 விமானங்கள் பறந்து சென்றதை பார்த்ததாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

கடந்த 14-ம் தேதி சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று அதிகாலை இந்திய விமானப்படையினர் தீவிரவாதிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 350-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் தீவிரவாதிகள் முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. 

இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் எச்சரித்திருந்தது. அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வந்தனர். இந்நிலையில் காஷ்மீர் வான் எல்லைப் பகுதிக்குள் இன்று காலை நுழைய முயன்ற பாகிஸ்தானின் 2 எஃப்16 ரக போர் விமானங்களை இந்திய ராணுவத்தினர் விரட்டியடித்தனர். இதனால் அனைத்து விமான நிலையங்களில் உஷார்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீர் வான் பகுதியில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக உத்தரகாண்டின் டேராடூன், சண்டிகர், அமிர்தசரஸ் விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, எல்லை தாண்டி ரஜோரி செக்டாரில் ஊடுருவிய பாகிஸ்தான் விமானங்கள், சிறிய ரக குண்டுகளை வீசியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நவ்ஷேரா எல்லைக்கு அப்பால் லாம் பள்ளத்தாக்கில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். 

இந்த பரபரப்புக்களுக்கிடையே தமிழ்நாட்டில் சென்னை, தாம்பரத்தில் அமைந்துள்ள இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானப்படை தளத்தில் இருந்து இன்று அதிகாலை முதல் விமானங்கள் சீறிபாய்ந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 20 விமானங்கள் பறந்து சென்றதை பார்த்ததாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. அந்த விமானங்கள் காஷ்மீர் பகுதிக்கு சென்று போர் பயிற்சிகளில் ஈடுபடுத்த சென்றுள்ளதாக கூறப்படுகிறது.