சென்னை அருகே கடன் பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை ஆவடி அடுத்த அண்ணனூர் சிவசக்தி நகர் 24-வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி (65). கட்டிட கான்டிராக்டர். இவரது மனைவி சுப்பம்மாள் (60). தம்பதிக்கு நாகராஜ் (35), ரவி (30) என்ற 2 மகன்கள் மற்றும் முனியம்மாள், ஜோதி, கல்யாணி (25) என்ற 3 மகள்கள் உள்ளனர். நாகராஜிக்கு திருமணமாகி கடந்த 10 ஆண்டுக்கு முன்பு அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். ரவியின் மனைவி மஞ்சு கடந்த 2 நாளுக்கு முன்பாக அவரை விட்டு பிரிந்து சென்று தேனி அடுத்த கம்பம் பகுதியில் வசித்து வருகிறார். மூத்த மகள் முனியம்மாள் மாதவரத்தில் கணவருடன் வசித்து வருகிறார். 2-வது மகள் ஜோதி ஆந்திராவில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

3-வது மகள் கல்யாணி தனது கணவர் ஆறுமுகத்துடன் அண்ணனூர் கிராமத்தில் வசித்து வருகிறார். தம்பதிக்கு சர்வேஸ்வரி (7), யோகேஸ்வரி (6) என்ற 2 மகள்கள் உள்ளனர். கோவிந்தசாமி, மனைவி சுப்பம்மாள் மற்றும் மகன்களான நாகராஜ், ரவி ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். கோவிந்தசாமி கட்டுமான வேலைக்கு 2 மகன்களும் உதவியாக இருந்து வந்தனர். 

இந்நிலையில் கடந்த 10-ம் தேதி கல்யாணி தனது 2 மகள்களுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். ஆறுமுகம் தனது வீட்டிலேயே தங்கி வேலைக்கு சென்று வந்தார். நேற்று மாலை ஆறுமுகம் மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க மாமனார் கோவிந்தசாமியின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மாமனார் கோவிந்தசாமி, மாமியார் சுப்பம்மாள், மைத்துனர்கள் நாகராஜ், ரவி மற்றும் மனைவி கல்யாணி, மகள்கள் 2 பேர் என மொத்தம் 7 பேரும் வீட்டில் வாந்தி எடுத்த நிலையில் மயங்கி கிடந்தனர்.  

இதில், கோவிந்தசாமி, சுப்பம்மாள், நாகராஜ், ரவி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கல்யாணி மற்றும் அவரது மகள்கள் 2 பேரும் அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் 3 பேரையும் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கோவிந்தசாமி தனது 3 மகள்களுக்கு திருமணம் செய்ததற்காக பலரிடம் கடன் வாங்கியதால் அதை அடைக்க முடியாமலும், உறவினர்களிடம் வாங்கிய கடனை கொடுக்க முடியாமலும் திணறி வந்துள்ளார். இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரிவந்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.