Asianet News TamilAsianet News Tamil

செல்போனால் சிதறிய கவனம்... தண்டவாளத்தை கடக்க முயன்ற ஐடி பெண் உடல் சிதறி உயிரிழப்பு..!

சென்னை பெருங்களத்தூரில் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த பெண் ஐடி ஊழியர் ரயில் மோதியதில் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

chennai crossing railway track girl dead
Author
Tamil Nadu, First Published Oct 9, 2019, 5:29 PM IST

சென்னை பெருங்களத்தூரில் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த பெண் ஐடி ஊழியர் ரயில் மோதியதில் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் மித்ரா (25). இவர், தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் தனியாக அறை எடுத்து தங்கி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் வேலை தொடர்பாக வெளிநாடு சென்ற அவர் நேற்று காலை விமானம் மூலம் சென்னை திரும்பினார். 

chennai crossing railway track girl dead

நேற்று காலை பெருங்களத்தூரில் உள்ள அவரது அறைக்கு வந்துவிட்டு, வேலைக்கு செல்வதற்காக புறப்பட்டு சென்றார். அப்போது பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே செல்போன் பேசியபடியே தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அவ்வழியாக வந்த விரைவு ரயில் மோதியதில் மித்ரா உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து, தகவலறிந்து வந்த தாம்பரம் ரயில்வே போலீசார், மித்ரா உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், ஆதம்பாக்கம் ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த டாக்டர் ஜோதி என்பவரது மகள் அனுஷா (17) கிண்டி-பரங்கிமலை ரயில் நிலையம் இடையே ஆலந்தூர் நிதிநிலை மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள ரயில்வே கிராசிங் பகுதியை கடக்க முயன்றார். அப்போது ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியதில் அனுஷா பரிதாபமாக உயிரிழந்தார். 

chennai crossing railway track girl dead

தண்டவாளத்தை கடப்பது சட்டப்படி தவறு என்பதும் தண்டவாளத்தை கடக்க அதற்கென கட்டப்பட்டுள்ள படிகளில்தான் கடக்க வேண்டும் என்றும் ரயில்வே துறை பலமுறை விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியும் படித்தவர்களே விதிகளை மீறுவதால் உயிரிழப்பு அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios