சென்னை மாநகராட்சியின் எச்சரிக்கையை அடுத்து விடுதிகளை கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற அண்ணா பல்கலைக்கழகம் சம்மதம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தனிமைப்படுத்துதல் முகாம்கள் அமைக்க பல கட்டடங்கள் தற்போது உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகள் உள்பட பல கட்டிடங்கள் தற்போது தனிமைப்படுத்தல் முகாமாக மாறி உள்ளன. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாணவர் விடுதியும் தனிமைப்படுத்துதல் முகாமாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு  செய்தது. 

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் வரும் 20-ம் தேதிக்குள் அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால், பல்கலைக்கழக விடுதியில் மாணவர்களின் உடைமைகள் இருப்பதால் இப்போதைக்கு ஒப்படைக்க முடியாது எனத் துணை வேந்தர் சூரப்பா கூறியிருந்தார்.

இதற்கு மாநகராட்சி தரப்பில் ஒப்படைக்கவில்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் விடுதிக்கு பதிலாக ஆடிட்டோரியத்தை தர முடிவுசெய்திருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், விடுதிகளை கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க அண்ணா பல்கலைக்கழகம் சம்மதம் தெரிவித்துள்ளது. இதனால் விடுதிகளை காலி செய்யுமாறு மாணவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கடிதம் எழுதியுள்ளது. மேலும், மாணவர்கள் பாதுகாப்பாக செல்வதற்கான வசதிகளை செய்யுமாறு மாநகராட்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் கொரோனா தொற்று முடிந்து விடுதிகளை திருப்பி அளிக்கும்போது மாணவர்கள் உடனடியாக உபயோகப்படுத்தும் வகையில் சுத்தப்படுத்தி தர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.