கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசி காதல் வலை வீசிய மாநகராட்சி உதவி பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வீடுகள்தோறும் கணக்கு எடுக்கும் பணிகளில் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் தன்னார்வலர்கள் போல் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில், சென்னை மண்ணடி தம்புச்செட்டி தெருவில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வரும் கமலக்கண்ணன் என்பவர், தன்னார்வ பணியில் ஈடுபட்டு வரும் கல்லூரி மாணவி ஒருவரிடம் தனது காதல் வலையை விரித்து தற்போது வம்பில் மாட்டிக்கொண்டுள்ளார். இவர், தனக்கு கீழ் பணியாற்றி வந்த கல்லூரி மாணவி ஒருவருரை தனது அதிகாரத்தை பயன்படுத்தி போனில் பேசிய ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆடியோவில் விவரம் வருமாறு:

ஹலோ நான் மாநகராட்சி உதவி பொறியாளர் பேசுகிறேன்.

கல்லூரி மாணவி: சொல்லுங்க சார்...

உதவி பொறியாளர்: உன்னை பார்க்காமல், பேசாமல் என்னால் இருக்க முடியில... நான் உன்னை விரும்புகிறேன். உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.

கல்லூரி மாணவி: சார் நீங்க பேசுவது எனக்கு புரியவில்லை.....என்னோடு பணிபுரியும் அனைவருக்கும் என்னை பிடிக்கும். எனக்கும் அவர்களை பிடிக்கும்....

உதவி பொறியாளர்: உன்னை எனக்கு வேறு விதமாக பிடித்திருக்கிறது. அதன் அர்த்தம் உனக்கு புரியவில்லையா?

கல்லூரி மாணவி: நீங்க சொல்வது எனக்கு புரியவில்லை....என்ன அர்த்தத்தில் சார் நீங்கள் சொல்றீங்கனு எனக்கு தெரியவில்லை சார்.  

உதவி பொறியாளர்: கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கிற...நான் உன்னை விரும்புகிறேன் என்று சொல்கிறேன் அதன் அர்த்தம் உனக்கு புரியவில்லையா...

கல்லூரி மாணவி: சார் புரியும்படி சொல்லுங்க....

உதவி பொறியாளர்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் உன்னை பார்த்து இருந்தால், ‘நீ எனக்கு திருமதியாக’ ஆகியிருப்பாய். நான் உன்னை தான் மணம் முடித்திருப்பேன்.

கல்லூரி மாணவி: சார்...இப்படியெல்லாம் சொல்லி என்னை நீங்க கலாய்க்காதீங்க சார்.....

உதவி பொறியாளர்: உனது ‘டிக் டாக்’ வீடியோக்களை பார்த்து ரசிப்பேன்..... உன்னை நான் எனது உயர் அதிகாரிகளிடம் பேசி உன்னை பணிக்கு அமர்த்தினேன்.

கல்லூரி மாணவி: சார் வீட்டில் ஆட்கள் இருக்காங்க, என்று கூறி இணைப்பை துண்டித்து விடுகிறார்.இருந்தாலும் உதவி பொறியாளர் கமலக்கண்ணன் தொடர்ந்து கல்லூரி மாணவிக்கு போன் செய்து  அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். முதலில் இதை விளையாட்டாக எடுத்துக் கொண்ட கல்லூரி மாணவி, ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்தார். உடனே உதவி பொறியாளர் கமலக்கண்ணன் பேசிய ஆடியோவுடன்  தனக்கு பணி பாதுகாப்பு வேண்டும் என்றும், உதவி பொறியாளர் கமலக்கண்ணன் அடிக்கடி போன் செய்து காதல் தொந்தரவு கொடுப்பதாகவும் தற்போது சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.  

அப்போது, கல்லூரி மாணவியிடம்  சென்னை மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் தனது பாதுகாப்புக்காக கல்லூரி மாணவி தன்னிடம் தொடர்ந்து தவறாக பேசிய உதவி பொறியாளர் மீது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியிடம் புகார் அளித்துள்ளார். அதன்படி விசாரணையை அனைத்து மகளிர் போலீசார் தொடங்கி உள்ளனர். கொரோனா தடுப்பு பணிக்கு ஆட்கள் வராத நிலையில் தன்னார்வமாக வந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு உதவி பொறியாளர் ஒருவர் ஆபாசமாக பேசி காதல் வலை விரித்த சம்பவம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மக்களிடையை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, அந்த மாணவி இதுகுறித்து சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியிடம் முறையிட்டுள்ளார். துணை கமிஷனர் ஜெயலட்சுமி இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக ஐகோர்ட்டு மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், சம்பந்தப்பட்ட சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் கமலக்கண்ணன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பிறப்பித்துள்ளார்.