தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியவில்லையா?.. மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி சொன்ன மாநகராட்சி ஆணையர்!
மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியாத நபர்கள் நாங்கள் அறிவித்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கத்தை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே கொரோனாவிடம் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளும் பேராயுதம் என்பதால், மக்களுக்கு இதுகுறித்து அரசு சார்பில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி சார்பில் தடுப்பூசி செலுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது: முன்களப் பணியாளர்கள், பால் வினியோகம் செய்பவர்கள், பத்திரிக்கையாளர்கள்,ஆசிரியர்கள், மாநகராட்சி ஊழியர்கள்,உள்ளிட்ட அனைவரும் தடுப்பூசிகள் போட கேட்டுக்கொள்கிறோம்.45வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட வேண்டும், அதற்காக சென்னை மாநகரில் 176 இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதை பயன்படுத்தி அனைவரும் பயன்பெருங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.
18-45 வயதுடைய நபர்கள் உடலை முறையாக பரிசோதனை செய்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம், மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்,முடியாத நபர்கள் நாங்கள் அறிவித்துள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தன்னார்வ தொண்டு நிறுவனர்கள் சார்பில், வீடில்லாத மக்கள், தெருவோரங்களில் தங்கியிருக்கும் மக்கள் ஆகியோருக்கு உணவு கொடுப்பதற்கு அனுமதி வழங்கி உள்ளோம்.
முறைப்படி மாநகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டுகிறோம். மேலும்,மாநகராட்சி சார்பிலும் உணவு கொடுத்து வருகிறோம் என்றார். தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்குவதற்காக மத்திய அரசிடம் பேசியுள்ளோம்.மேலும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை அதிக அளவில் ஏற்படுத்தி வருகிறோம். குறிப்பாக 18 வயதிற்கு மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள், மளிகை கடையில் வேலை செய்பவர்கள் உள்ளிட்ட 36பிரிவுகளின் கீழ் இருக்கும் நபர்களுக்கு கட்டாயமாக தடுப்பூசி போடவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.