சென்னை ஃபீனிக்ஸ் மாலுக்கு இந்த தேதிகளில் போனவர்களா நீங்கள்? உடனே தகவல் சொல்லுங்க.. ஃபோன் நம்பர் உள்ளயே இருக்கு
சென்னை ஃபீனிக்ஸ் மாலுக்கு மார்ச் 10 முதல் 17ம் தேதி வரை சென்றவர்கள் தாமாக முன்வந்து தகவல் கொடுக்குமாறு சென்னை மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 300ஐ கடந்துவிட்டது. நேற்று 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 234ஆக அதிகரித்திருந்தது. இந்நிலையில், அவர்கள் அனைவருமே டெல்லி நிஜாமுதீனில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள்.
டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்துகொண்ட 1103 பேரையும் கண்டறிந்து, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் ஒருசிலரின் சோதனை முடிவுகள் மட்டும் இன்னும் வரவில்லை. பெரும்பாலானோரின் முடிவு வந்துவிட்ட நிலையில், இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 75 பேரில்ம் 74 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள்.
எனவே தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309ஆக அதிகரித்துள்ளது. கேரளாவை ஓவர்டேக் செய்து, கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது தமிழ்நாடு.
இந்நிலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் உள்ள கடைகளில் பணிபுரிந்த மூவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால், மார்ச் 10 முதல் 17 வரை ஃபீனிக்ஸ் மாலுக்கு சென்றவர்கள் மற்றும் ஃபீனிக்ஸ் மாலில் உள்ள கடைகளில் பணீபுரிவோர் அனைவரும் தாமாக முன்வந்து தகவல் கொடுத்து தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
ஃபீனிக்ஸ் மாலுக்கு சென்றவர்களும் அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியிருப்பதுடன், கொரோனா அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஃபீனிக்ஸ் மால் சென்றவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 044 - 25384520, 044 - 46122300 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.