சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அடுத்தடுத்து 11 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. தமிழகத்தில் கடந்த 4 நாட்களாகவே கொரோனா பாதிப்பு 1000ஐ தாண்டி வருகிறது. அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வந்த போதிலும் பொதுமக்கள் மத்தியில் போதிய ஒத்தழைப்பு இல்லாததால் கொரோனா சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் வேகமாக பரவி வருகிறது. 

இந்நிலையில்,  தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  25,872 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் நேற்று பாதிக்கப்பட்ட 1,286 பேரில் 1,012 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,598 ஆக அதிகரித்து இருக்கிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவுக்கு 11 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு 208 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே சென்னையில் கொரோனா உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த வகையில், சென்னையில் இன்று கொரோனாவால் அடுத்தடுத்து 11 பேர் உயிரிழந்துள்ளனர்.  சென்னை ஸ்டான்லியில் 2 பேரும், ராஜூவ் காந்தி மருத்துவமனையில் 5 பேரும்,  கே.எம்.சி.மருத்துவமனையில் 3 பேரும், ஆயிரம் விளக்கில் தனியார் மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, சென்னையில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.