சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் அண்மையில் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில்நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வெளியூர்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் பொதுமக்கள் தினமும் ஆயிரக்கணக்கில் இங்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்களை வழியனுப்ப உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் ரயில்நிலைய வளாகத்திற்குள் வருவார்கள். ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் தவிர்த்து மற்றவர்கள் பிளாட்பார டிக்கெட் எடுக்க வேண்டும் என்பது நடைமுறையில் இருக்கிறது.

முன்னதாக 5 ரூபாயாக இருந்த பிளாட்பார டிக்கெட் கடந்த 2015ம் ஆண்டு 10 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன்பிறகு விலை உயர்த்தப்படவில்லை. இந்தநிலையில்  சென்னை சென்ட்ரல் ரயில்நிலைய பிளாட்பார டிக்கெட் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. கோடை விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு பொதுமக்களின் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் மீண்டும் பழைய விலை அமல்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்டிரலில் பிளாட்பார டிக்கெட் விலை ரூ.5 உயருகிறது - 3 மாதங்கள் மட்டும் அமலில் இருக்கும்

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோடை விடுமுறை நாட்களில் எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து ஜூன் 30-ந் தேதி வரை 3 மாதங்களுக்கு பிளாட்பார டிக்கெட் விலை உயர்த்தப்படுகிறது. அதன்படி தற்போது ரூ.10 ஆக உள்ள நடைமேடை டிக்கெட் விலை 5 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.15-க்கு விற்கப்படும். 3 மாதம் அமலுக்கு பிறகு ஜூலை மாதம் முதல் மீண்டும் பிளாட்பார டிக்கெட் ரூ.10-க்கு விற்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாஜக பிரமுகர் கடையில் சரமாரி முட்டை வீச்சு..! அறந்தாங்கியில் பரபரப்பு..!