சென்னையில் ஷாகீன் பாக் ஸ்டைலில் ஒருபோராட்டத்தை முன்னெடுக்க இஸ்லாமியர்களும் அவர்களுக்கு ஆதரவாக சில அரசியல் கட்சியினரும் செயல்பட்டு வருவதை மோப்பம் பிடித்த உளவுத்துறை எச்சரித்தும் நிலைமை கையை மீறிச் சென்றுள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்கள் அனைத்திற்கும் எவ்வித சிரமும் இன்றி அவர்களால் அனுமதி பெற முடிந்தது- காரணம் இஸ்லாமியர்கள் போராட்டத்திற்கு உரிய நிபந்தனைகளுடன் அனுமதி கொடுக்க வேண்டும் என்கிற மேலிட உத்தரவு தான். இதனை ஏற்று அனுமதி கொடுத்த இடங்களில் எல்லாம் போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் தங்களுக்கான நேரம் முடிந்த உடன் கலைந்து சென்றனர்.

இதனால் தமிழகத்தில் தான் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் அமைதியாக நடந்து வருகிறது என்கிற பேச்சு இருந்தது. இந்த நிலையில் திடீரென நேற்று முன் தினம் சென்னை மாநகர காவல் ஆணையர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் சென்னையில் இரண்டு வார காலத்திற்கு போராட்டம், ஆர்பாட்டம், பேரணி நடத்த அனுமதி இல்லை என்பது தான். திடீரென ஏன் இப்படி ஒருஅறிக்கையை காவல் ஆணையர் வெளியிட வேண்டும் என்று விசாரித்த போது தான் உண்மை வெளியானது.

சட்டப்பேரவை கூடும் சமயத்தில் சிஏஏவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையுடன் சென்னையில் ஷாகீன் பாக் பாணியில் ஒரு போராட்டம் நடத்த இஸ்லாமியர்கள் திட்டமிட்டுள்ளதையும், அதன் பின்னணியில் முக்கியமான சில கட்சிகள் இருப்பதையும் உளவுத்துறை மோப்பம் பிடித்துள்ளது. உடனடியாக இது குறித்து சென்னை காவல் ஆணையரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டே, அந்த ஆர்பாட்டம், போராட்டம் தடை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சென்னையை பொருத்தவரை மெரினாவிற்கு அருகே உள்ள திருவல்லிக்கேணி பகுதியில் தான் இப்படி ஒரு போராட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளது. இல்லை என்றால் மண்ணடியில் ஷாகீன் பாக் ஸ்டைல் போராட்டம் நடைபெறும் என்று கணிக்கப்பட்டது. இதனால் போலீசார் அந்த இடங்களை கண்காணித்து வந்த நிலையில் தான் வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடைபெற்றது. இந்த வண்ணாரப்பேட்டை போராட்டத்திற்கு கடந்த வாரமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்று நடைபெறும் போராட்டம் என்பதால் உரிய நேரத்தில் முடித்துவிடுவார்கள் என்று போலீசார் தப்புக் கணக்கு போட்டுள்ளனர்.

வண்ணாரப்பேட்டை போராட்டத்திற்கு கொடுத்திருந்த அனுமதியை நேற்று காலையிலேயே ரத்து செய்திருந்தால் நிலைமை இந்த அளவிற்கு கையை மீறிச் சென்று இருக்காது என்று போலீசில் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். மற்றொரு தரப்பினரோ, வண்ணாரப்பேட்டையில் ஷாகீன் பாக் ஸ்டைல் போராட்டம் நடைபெற வாய்ப்பில்லை என்று தவறாக கணித்துவிட்டதாக சொல்கிறார்கள். எது எப்படியோ அமைதிப்பூங்காவாக உள்ள தமிழகம் அப்படியே தொடர போலீசார் மட்டும் அல்ல தமிழக அரசும் ஆவண செய்ய வேண்டும்.