சென்னை பட்டினப்பாக்கத்தில் பிரபல தொழிலதிபர் வீட்டில் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்களுக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இதனால், சமூகபரவலாகிவிடுமோ என்ற அச்சத்தில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்ததது. 

ஆகையால், கடந்த 5 நாட்களாக புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56-க்கு கீழ் இருந்தது. இதனால், தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில்,  நேற்று ஒரே நாளில் மட்டும் 105 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் 50 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனிடையே, மத்திய அரசு அறிவுறுத்தலின் படி சில பகுதிகளில் ஊரடங்கு தளர்த்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

 இந்நிலையில்,  இன்று சென்னை பட்டினப்பாக்கத்தில் பிரபல தொழிலதிபர் வீட்டில் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தொழிலதிபர் வீட்டில் பணியாற்றிய 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து இவர்களுக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தொழிலதிபரின் வீடு மற்றும் அவர்கள் வசித்து வரும் பகுதியில் சீல் வைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது