சென்னையில் இருசக்கர வாகனம் மீது மாநகரப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தாய் மற்றும் மகள் சிவானி ஆகியோர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், சிறுவன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். 

சென்னை திரிசூலம் அம்மன் நகர் 2-வது தெருவில் வசிப்பவர் ஆறுமுகம் (28). இவரது மனைவி சுதா (25). இவர்களுக்கு சிவானி (5) தீபன் (2) என்கிற இரு குழந்தைகள் உள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சுதா மகள், மகனுடன் கோவிலம்பாக்கத்தில் தாய் வீட்டிற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது, மேடவாக்கம் பிரதான சாலை ரவீந்திர பாரதி பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தார். பாலம் தொடர்பான பணி நடைபெறுவதால் அந்த சாலை குண்டு குழியுமாக இருந்தது. இருசக்கர வாகனத்தில் சென்றிக்கொண்டிருந்த சுதா திடீரென நிலை தடுமாறி சாலையில் சரிந்து விழுந்தார். இதில், அவரது மகள் சிவானியும் சாலையின் வலதுபுறமும், சிறுவன் தீபனும் இடதுபுறமும் விழுந்தனர். 

அப்போது, கவனிக்காமல் பின்னாடி வேகமாக வந்த மாநகர பேருந்து அவர்கள் தலை மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் தாய் மற்றும் குழந்தை துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சாலையின் இடதுபக்கம் விழுந்ததால் அதிஷ்டவசமாக சிறுவன் தீபன் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இதனையடுத்து, பேருந்து வேகமாக இயக்கி ஓட்டுநரை பொதுமக்கள் தாக்கினர். 

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தி்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் தங்கய்யா என்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் தாய் மற்றும்  மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.