தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பாக 43 வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை நந்தனத்தில் இருக்கும் YMCA மைதானத்தில் நாளை தொடங்குகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புத்தக கண்காட்சியை தொடங்கி வைக்க இருக்கிறார். விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் என பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதில் தமிழறிஞர்களுக்கும் பதிப்புத்துறை மற்றும் விற்பனைத்துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.

நாளை தொடங்கும் புத்தக கண்காட்சி ஜனவரி 21ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 800 அரங்குகளுக்கு மேல் அமைக்கப்பட்டு 1 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட இருக்கிறது. பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்களும், கிடைப்பதற்கரிய நூல்களும் இங்கு இடம்பெறும் என்று நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தக கண்காட்சியில் வாங்கப்படும் நூல்களுக்கு 10 சதவீத சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது.

தினமும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் புத்தக கண்காட்சி நடைபெற இருக்கிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நுழைவு கட்டணம் கிடையாது. பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, முதலுவதி சிகிச்சை போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.