சென்னை - பெங்களூரு புல்லட் ரயில் இதே 435 கிமீ தூரத்தை கடக்க 1:10 மணிநேரம் மட்டுமே ஆகும் என ரயில்வே தரப்பில் சொல்லப்படுகிறது.

பெங்களூரு வழியாக சென்னை - மைசூரு இடையேயான புல்லட் ரயில் திட்டத்திற்கான நில அளவை பணிகளை ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் சமீபத்தில் தொடங்கியுள்ளது. இதுவரை கோலார் முதல் சென்னை வரையான நில அளவை முடிந்துள்ளது.

இரு தென் மாநிலங்களின் தலைநகரங்களுக்கு இடையேயான வான்வழி ஆய்வும் இதே நிறுவனம் மூலம் விரைவில் தொடங்க உள்ளது. ஆய்வுகள் முடிந்த பிறகு புல்லட் ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) பல்வேறு அதிவேக ரயில் வழித்தடங்களுக்கான ஆய்வைத் தொடங்கிய பின்னர், சில ஆண்டுகளுக்கு முன்பு மைசூரு-பெங்களூரு-சென்னை இடையேயான அதிவேக ரயில் பாதைக்கு முதல் அனுமதி கிடைத்தது.

தற்போது, சென்னை மற்றும் மைசூரு இடையே பெங்களூரு வழியாக அதிவேக ரயில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இது 435 கிமீ தூரத்தை கடக்க 4:30 மணிநேரத்தில் கடக்கும். புல்லட் ரயில் இதே 435 கிமீ தூரத்தை கடக்க 1:10 மணிநேரம் மட்டுமே ஆகும் எனச் சொல்லப்படுகிறது.

விரிவான திட்ட அறிக்கையானது இரு நகரங்களுக்கிடையேயான ஒருங்கிணைக்கப்பட்ட பயணிகளின் தரவைக் கொண்டிருக்கும். இதில் பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலைகளுக்கு இடையே உள்ள சுங்கச்சாவடிகளின் போக்குவரத்து தரவு மற்றும் அதே காலகட்டத்தில் ரயில் மற்றும் விமானத்தில் பயணித்த பயணிகள் தரவு ஆகியவை அடங்கும்.

பெங்களூரு-மைசூரு-சென்னை வழித்தடம் அதிக மக்கள் போக்குவரத்து உள்ள பகுதியாகும். இரு நகரங்களிலும் பல பெரிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் இவ்விரு நகரங்களுக்கு இடையே அடிக்கடி பயணிப்பவர்களின் பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கும்.