ரூ. 1 கோடி மதிப்பிலான பி.எம்.டபிள்.யூ. கார்... ஊழியர்களுக்கு பரிசளித்த சென்னை நிறுவனம்..!
அவர்கள் இல்லாமல் கிஸ்ஃபுளோ இந்த நிலைக்கு வந்திருக்காது. இது அவர்களை பாராட்டி வழங்கப்படும் மிக சிறு அன்பளிப்பு தான் என சுரேஷ் சம்பந்தம் தெரிவித்தார்.
சென்னையை சேர்ந்த வொக்ர்ஃபுளோ சாஃப்ட்வேர் நிறுவனமான கிஸ்ஃபுளோ (Kissflow) தனது ஊழியர்களுக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான புத்தம் புதிய பி.எம்.டபிள்யூ. சீரிஸ் 5 கார் மாடல்களை பரிசாக வழங்கி அசத்தி இருக்கிறது. இவற்றை கிஸ்ஃபுளோ நிறுவனர் சுரேஷ் சம்பந்தம் ஊழியர்களிடம் வழங்கினார். நிறுவனத்தில் நீண்ட கால ஒத்துழைப்பு வழங்கிய காரணத்திற்காக இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
வெள்ளிக் கிழமை (ஏப்ரல் 8) அன்று கிஸ்ஃபுளோ நிறுவனம் தனது பத்தாவது ஆண்டு விழாவை கொண்டாடியது. இத்துடன் நோ-கோட் எனும் பணி நிர்வாகம் சார்ந்த சேவையை அறிமுகம் செய்தது. அப்போது தான் கிஸ்ஃபுளோ நிறுவனத்தின் முதன்மை ஊழியர்களுக்கு கருப்பு நிற ஆடம்பர கார்களையும் பரிசாக வழங்கி அசத்தியது.
நெகிழ்ச்சி சம்பவம்:
கிஸ்ஃபுளோ மூத்த பிராடக்ட் அலுவலர் தினேஷ் வரதராஜன், பிராடக்ட் மேனேஜ்மெண்ட் இயக்குனர் கௌசகிராம் கிருஷ்ணசாயி, பொறியியல் பிரிவு இயக்குனர் விவேக் மதுரை, ஆதி ராமநாதன், துணை தலைவர் பிரச்சன்னா ராஜேந்திரன் ஆகியோருக்கு உலக வர்த்தக மையத்தில் வைத்து கிஸ்ஃபுளோ நிறுவனர் சுரேஷ் சம்பந்தம் பாராட்டு தெரிவித்தார்.
"ஆடம்பர கார் மாடலை தவிர வேறு ஏதும் சிறந்த பரிசை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. மிக கடுமையான சூழ்நிலைகளில் இவர்கள் தான் எனக்கு ஆதரவாக களத்தில் நின்றனர். இவர்கள் இல்லாமல் கிஸ்ஃபுளோ இந்த நிலைக்கு வந்திருக்காது. இது அவர்களை பாராட்டி வழங்கப்படும் மிக சிறு அன்பளிப்பு தான்," என சுரேஷ் சம்பந்தம் தெரிவித்தார்.
பழைய கார்:
பி.எம்.டபிள்யூ. சீரிஸ் 5 காரை பரிசாக பெற்ற ஊழியர்களுக்கு அன்று மதியம் வரை கார் பற்றிய தகவல் வழங்கப்படவே இல்லை. ஊழியர்களுக்கு கார் வழங்குவது பற்றிய முடிவு கடைசி வரை ரகசியமாகவே வைக்கப்பட்டு இருந்தது. எனினும், அந்த நாள் முழுக்க முதலீடு மற்றும் கைப்பற்றுதல் பற்றி பல்வேறு தகவல்கள் நிறுவனத்தில் அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தது. ஊழியர்களுக்கு புதிய சீரிஸ் 5 மாடலை பரிசாக வழங்கிய சுரேஷ் சம்பந்தம் தற்போது மூன்று ஆண்டுகள் பழைய சீரிஸ் 6 காரை பயன்படுத்தி வருகிறார்.
2012 ஆம் ஆண்டு கிஸ்ஃபுளோ நிறுவனத்தில் சுமார் பத்து லட்சம் டாலர்களை முதலீடு செய்த இந்தியன் ஏஞ்சல் நெட்வொர்க் எனும் முதலீட்டாளரிடம் இருந்து பங்குகளை வாங்கி இருப்பதாக சுரேஷ் சம்பந்தம் தெரிவித்தார். முதலீடு செய்த நிறுவனத்தில் இன்று பங்குகளை வாங்கி இருப்பது மிகவும் 'பெருமை மிக்க நாள்' என சுரேஷ் சம்பந்தம் தெரிவித்தார். முதலீடு செய்த நிறுவனம் அதில் இருந்து ஐந்து முதல் பத்து மடங்கு வரை லாபம் ஈட்டி இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
பெரும் முதலீடு:
கிஸ்ஃபுளோ நிறுவன பணிகளை வெளிநாடுகளிலும் நீட்டிக்க சுமார் ஒரு கோடி அமெரிக்க டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 759,600,000 முதலீடு செய்ய இருப்பதாக சுரேஷ் சம்பந்தம் தெரிவித்தார். முதலீட்டின் படி துபாய், பிரேசில், பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் அலுவலகங்களை திறக்க முடிவு செய்துள்ளது. கிஸ்ஃபுளோ நிறுவனத்திற்கு கிடைக்கும் வருவாயில் 92 சதவீதம் வெளிநாடுகளில் இருந்தே கிடைக்கிறது. மேலும் கிஸ்ஃபுளோ நிறுவனத்திற்கு உலகின் 160 நாடுகளில் வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது.