சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை அண்ணா சாலையில் காமராஜர் அரங்கத்திற்கு அருகே மாலை சுமார் 3.45 மணியளவில் நாட்டு வெடிகுண்டு பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. பயங்கர வெடி சத்தத்தின் காரணமாக அருகில் இருந்த கார் கண்ணாடிகள், ஷோரூமின் கண்ணாடிகள் உடைந்து சிதறியது. இவ்வளவு பெரிய சத்தத்துடன் என்ன வெடிக்கிறது என அருகில் உள்ள கடைகளில் உள்ள நபர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அலறியடித்துக்கொண்டு வெளியே வந்தனர். 

இந்நிலையில், தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்கு 10 அடி தொலைவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக உடனே தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சோதனை நடத்தியதில் அது நாட்டு வெடிகுண்டு என்றும் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். 

அதில், இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசி விட்டு செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. ஆனால், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே தேனாம்பேட்டையில் உள்ள புறக்காவல் நிலையத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது குறிப்பிடத்தக்கது.