காஞ்சிபுரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால், நிர்வாக வசதிக்காக மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

புதிய மாவட்டத்தை தோற்றுவிப்பது தொடர்பாக, சென்னை கூடுதல் தலைமை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தலைமையில், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பொது மக்கள் நல்லுறவு மைய கட்டிடத்தில் வரும்5ம் தேதி மதிம் 2 மணிமுதல் 6 மணிவரை, 6ம் தேதி காலை 10 மணிமுதல் மதியம் 12 மணிவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எம்பிக்கள், எம்எல்ஏக்கள், காஞ்சிபுரம் மற்றும் மதுராந்தகம் வருவாய் கோட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் பிற அமைப்பினரிடம் கூட்டம் நடத்தி கருத்து கேட்க உள்ளதாகவும், செங்கல்பட்டு வருவாய் கோட்ட அலுவலகத்தில் 6ம் தேதி மதியம் 2.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் வருவாய் கோட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள், பொது நல அமைப்புகள் மற்றும் பிற அமைப்பினரிடம் கருத்து கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது இந்த தேதிகள் மாற்றப்பட்டு, மாற்று நாட்களாக வரும் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கருத்துக் கூட்டம் நடைபெறும். எனவே, இதுதொடர்பாக எழுத்து மூலமாகவோ அல்லது நேரிடையாகவோ கருத்து தெரிவிக்க விரும்புவோர் மேற்கண்ட தேதிகளில், மேற்குறிப்பிட்ட இடங்களில் நடக்கும் கூட்டங்களில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.