செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவலம்… மருத்துவ கழிவுகளால் நோய் தொற்று அபாயம்
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால், நோயாளிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதனை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால், நோயாளிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதனை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் சுமார் 5 ஆயிரம் பேர் புறநோயாளிகளாகவும், 3 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனா். அனைத்து நோய்களுக்கும், இங்கு சிகிச்சை அளிப்பதால், மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதனால், இந்த மருத்துவமனை எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.
இந்த மருத்துவமனை வளாகத்தில், எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு அருகே, சிகிச்சையின்போது வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு, மலைப்போல் காட்சியளிக்கிறது. உடனுக்குடன் அகற்றப்படாததால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் எலும்பு சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, பிசியோதெரபி, காலரா வார்டு ஆகிய பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், கடும் துர்நாற்றத்தால் கடும் சிரமம் அடைகின்றனர். ஏற்கனவே உள்ள நோய்க்கு சிகிச்சை பெற வந்த தங்களுக்கு, மேலும் கூடுதல் நோய் ஏற்படுமோ என்ற அச்சத்துடன் அங்கு இருக்கின்றனர்.
அதேபோல், நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் உறவினர்களுக்கும், அவர்களை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.
இதுகுறித்து நோயாளிகள் கூறுகையிர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேரும் குப்பைகள், மருத்துவ கழிவுகள், அறுவை சிகிச்சை பிரிவில் வெளியேற்றப்படும் ரத்தம் படிந்த பஞ்சு, உடல் உறுப்புகள் ஆகியவை திறந்த வெளியில் கொட்டப்படுகின்றன.
இங்குள்ள சவ கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஒருபுறம் துர்நாற்றம் வீசி வருகிறது. அதன் அருகிலேயே இதுபோன்ற மருத்துவ கழிவுகளை கொட்டுவதால், அப்பகுதியை கடந்து செல்வதே பெரும் சிரமமாக உள்ளது.
மருத்துவமனையை ஒட்டி, அண்ணா நகர் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இங்கு சுமார் 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களும், இந்த துர்நாற்றத்தால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். இந்த மருத்துவ கழிவுகளை, நகராட்சி துப்புரவு ஊழியர்கள் அகற்ற வேண்டும். ஆனால், அவர்களும் அதை கண்டும் கொள்ளாமல் உள்ளனர்.
அதேநேரத்தில், மருத்துவமனையில் இருந்து வெளியேறும் குப்பைகளை தரம் பிரிக்காமல் கொட்டுகின்றனர். இதனால், நகராட்சி ஊழியர்களுக்கு சிரமம் ஏற்படுவதாக கூறி, அவர்களும் அதை அகற்றாமல் மெத்தன போக்குடன் இருக்கின்றனர்.
எனவே, மருத்துவமனை வளாகத்தில் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை உடனுக்குடன் அகற்றி, நோயாளிகளுக்கும், அவர்களுடன் உள்ள உறவினர்களுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தடுக்க மருத்துவமனை நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.