சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இரவில் சப்பாத்தி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. சப்பாத்திக்குப் பதில் இட்லி, தக்காளி சாதம் வழங்கப்பட்டு வருகிறது. 

ஏழை-எளிய மக்கள் மலிவு விலையில் வயிறார சாப்பிடுவதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. முதலில் சென்னையிலும் பின்னர் மாநிலத்தின் பல பகுதிகளிலும் இந்த உணவகம் தொடங்கப்பட்டது. அதன்படி தினந்தோறும் 3 வேளைகளிலும் இங்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. காலையில் இட்லி ரூ.1, மதியம் எலுமிச்சை சாதம், கறிவேப்பிலை சாதம், சாம்பர் சாதம், தக்காளி சாதம் ஆகியவை ரூ.5, தயிர் சாதம் ரூ.3 என விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல இரவில் 2 சப்பாத்தி ரூ.3-க்கு வழங்கப்படுகிறது.


ஏழை எளியவர்கள், வேலை தேடி சென்னைக்கு வரும் இளைஞர்கள் என பலருக்கும் அட்சய பாத்திரமாக அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா காலத்தில் அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவசமாக பொதுமக்களுக்கு உணவுகள் வினியோகிக்கப்பட்டன. இந்நிலையில் திமுக ஆட்சி வந்ததும் சென்னையில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் படத்தை வைக்கவும் அம்மா பெயரை மறைக்கவும் கோரி திமுகவினர் செய்த ரகளை பேசுபொருளானது. ஆனால், ஸ்டாலின் உத்தரவின்பேரில் அம்மா பெயரிலேயே செயல்பட்டும் வருகிறது உந்த உணவகங்கள்.