நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்றது. அதில் தேனி மருத்துவ கல்லூரியில் உதித் சூர்யா என்கிற மாணவர் மோசடி செய்து சேர்ந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாணவரையும் அவரது பெற்றோரையும் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனிடையே அனைத்து மருத்துவ கல்லூரியிலும் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்களின் ஆவணங்களை சரிபார்க்குமாறு மருத்துவ கல்லூரி இயக்குனரகம் உத்தரவிட்டிருந்தது. இந்த மோசடியில் மேலும் பல மாணவர்கள் ஈடுபட்டிருக்க கூடும் என சந்தேகம் நிலவுவதால் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் இருக்கும் அனைத்து நீட் தேர்வு மையங்களுக்கும் சி.பி.சி.ஐ.டி சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. அதன்படி நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் ஆவணங்களை சரிபார்த்து உடனடியாக அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.  

மேலும் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் ஒரே பெயர் மற்றும் முகவரியில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களின் விவரங்களை அளிக்க வேண்டும் எனவும் நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு (என்.டி.ஏ.), சி.பி.சி.ஐ.டி. கடிதம் அனுப்பியுள்ளது.